பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்கவைத்த கும்பல் - கோவாவில் அதிர்ச்சி


பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்தவரை பொது இடத்தில் மிரட்டி மன்னிப்பு கேட்கவைத்த கும்பல் - கோவாவில் அதிர்ச்சி
x

செக் குடியரசை சேர்ந்த பிரபல யூடியூபர் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார்.

பனாஜி,

செக் குடியரசை சேர்ந்த பிரபல யூடியூபர் டவுக் அஹுண்ட்சடா இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடியோ எடுத்து வருகிறார். அவர் பதிவு செய்யும் வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டவுக் கோவாவின் கலங்ஹுடி பகுதிக்கு சென்ற வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பகுதிக்கு சென்ற டவுர் அங்கிருந்த ஒரு ஓட்டலில் சிலர் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தார். நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அங்கு இருந்தவர்களிடம் நீங்கள் எந்த அணிக்கு ஆதரவு என கேட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டல் உரிமையாளர் பாகிஸ்தான் என்றார்.

பாகிஸ்தான் அணிக்கு ஏன் ஆதரவு என டவுக் கேட்டார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் இது இஸ்லாமிய மதத்தினர் வசிக்கும் பகுதி என்று கூறியுள்ளார்.

அப்போது டவுக், இந்தியாவின் கோவா சந்தை பகுதியில் இருந்துகொண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிப்பதை பார்க்கும்போது வியப்பாக உள்ளது' என்று கூறியுள்ளார். அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி டவுக் பதிவிட்ட நிலையில் அதேவீடியோவை அவர் கடந்த 23-ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு என்று அந்த நபர் கூறியது தொடர்பாக டுவிட்டரில் பகிர்ந்த அந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில், இது இஸ்லாமிய மதத்தினர் வசிக்கும் பகுதி அதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவு என்று கூறிய ஓட்டல் உரிமையாளரை பரபரப்பான சாலையில் அப்பகுதியை சேர்ந்த கும்பல் நேற்று இரவு மிரட்டி, சிறைபிடித்தனர். மேலும், இந்த ஒட்டுமொத்த கிராமமும் கலங்ஹுடி. இஸ்லாமிய மதத்தினருக்கு மட்டுமின்றி வேறு யாருக்கும் தனி வழிகிடையாது. மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரிக்காதீர்கள்' என்று ஓட்டல் உரிமையாளரிடம் கூறினர். மேலும், ஓட்டல் உரிமையாளரை மிரட்டி மன்னிப்புகேட்க வைத்தனர். ஓட்டல் உரிமையாளர் முழங்காலிட்டு மன்னிப்புகேட்ட போது அவரை சுற்றியிருந்தவர்கள் 'பாரத் மாதாகி ஜெய்' என்று கூறி கோஷமிட்டனர்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த நபரை கும்பல் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் இது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.



Next Story