சத்யேந்திர ஜெயின், சிசோடியா ராஜினாமா; பரத்வாஜ், ஆதிஷியை மந்திரி சபையில் சேர்க்க கவர்னருக்கு கெஜ்ரிவால் பரிந்துரை


சத்யேந்திர ஜெயின், சிசோடியா ராஜினாமா; பரத்வாஜ், ஆதிஷியை மந்திரி சபையில் சேர்க்க கவர்னருக்கு  கெஜ்ரிவால் பரிந்துரை
x

டெல்லி ஆம் ஆத்மி மந்திரிகளான சத்யேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியா நேற்று தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்.

டெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை மந்திரியுமான மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவனியூ சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, மணிஷ் சிசோடியா தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.

அதேவேளை, ஆம் ஆத்மி மந்திரியான சத்யேந்திர ஜெயின் ஏற்கனவே பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இதனிடையே, சிறையில் உள்ள ஆம் ஆத்மி மந்திரிகளான மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் தங்கள் மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தனர். தங்கள் ராஜினாமா கடிதத்தை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பினர். இதனை தொடர்ந்து மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள துறைகளுக்கு புதிய மந்திரிகளை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நியமித்துள்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி இருவரும் மந்திரிகளாக்கப்பட உள்ளனர். மந்திரி சபையில் சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி சேர்க்கப்படுவதாகவும் அதற்கான ஒப்புதலை அளிக்கும்படி கவர்னருக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி ஆகிய 2 பேரையும் மந்திரிகளாக நியமிக்கும் பரிந்துரையை ஏற்றும்படி கவர்னருக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்திற்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளித்து சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி இருவருக்கும் பதவி பிரமானம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story