மத உணர்வுகளை புண்படுத்துதல்; 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனர் கைது
மத உணர்வுகளை புண்படுத்தியதாக ‘ஆல்ட் நியூஸ்’ செய்தி சரிபார்ப்பு இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக 'ஆல்ட் நியூஸ்' செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜூபைர் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, 2020-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் விசாரணைக்காக முகமது ஜூபைர் நேற்று டெல்லி போலீசில் ஆஜரானார். இந்த வழக்கில் முகமது ஜூபைரை கைது செய்ய டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு பின் ஜூபைர் 2018-ம் ஆண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த சர்ச்சைக்குரிய கருத்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருந்ததாக அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018-ல் முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரியை வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாலாஜிகிஜெய்ன் என்ற பெயர் கொண்ட டுவிட்டர் பயனாளர் மத உணர்வை புண்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ள முகமது மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி போலீஸ் டுவிட்டர் கணக்கை டேக் செய்திருந்தார்.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளை வேண்டுமென்றே அவமதிக்கும் வகையில் டுவிட்டரில் புகைப்படத்தை முகமது பதிவிட்டுள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்கள் உள்ளது என கூறி அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முகமது ஜூபைர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முகமதுவை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு மாஜிஸ்திரேட் அனுமதியளித்துள்ளார்.
முகமதுவின் காவல் அவகாசத்தை நீட்டிக்க போலீசார் தரப்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.