'மெஸ்சி'யின் ஆட்டத்தை காண்பதற்காக உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தனியே காரில் சென்ற கேரள பெண்மணி


மெஸ்சியின் ஆட்டத்தை காண்பதற்காக உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தனியே காரில் சென்ற கேரள பெண்மணி
x

கேரளாவில் இருந்து கத்தாருக்கு காரில் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார் நாஜி நவுஷி என்ற பெண்மணி.

உலகக் கோப்பை போட்டி காரணமாக உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை கால்பந்து ஜூரம் பற்றிக்கொண்டுள்ளது. நம் நாட்டிலும் கால்பந்து மோகம் அதிகமுள்ள மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் இதன் பரபரப்பு பரவியிருக்கிறது.

5 குழந்தைகளின் தாய்

இந்நிலையில், கேரளாவில் இருந்து கத்தாருக்கு காரில் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார் நாஜி நவுஷி என்ற பெண்மணி. 33 வயதாகும் இவர், 5 குழந்தைகளின் தாய். அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்சியின் அதிதீவிர ரசிகை.

களத்தில் தனது அபிமான ஹீரோவின் சாகசத்தை கண்ணாரக் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே நவுஷியின் கார் பயணத்தின் நோக்கம்.

தனியே பயணம்

மலையாள தேசத்தில் இருந்து 'மணல் தேசத்துக்கு' தனது பயணத்தை கடந்த மாதம் 15-ந் தேதி தொடங்கினார் நவுஷி. அவரது கார், மும்பையில் இருந்து ஓமன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக கத்தாருக்கு நவுஷி தானே தனியாக காரை ஓட்டிச்சென்றார்.

இவரின் ஆதர்ச நாயகரின் அணியான அர்ஜென்டினா, சவுதி அரேபியாவுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதில் அனேக அர்ஜென்டினா ரசிகர்களைப் போல நவுஷிக்கும் வருத்தம்தான்.

'மெய்சிலிர்க்க வைக்கிறது'

ஆனால், 'உலக கோப்பையை வெல்லும் அர்ஜென்டினாவின் பயணத்தில் இது ஒரு சிறு பின்னடைவுதான். எனது ஹீரோ மெஸ்சி ஆடுவதை நேரில் காணப்போகிறேன் என்பதே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது' என்கிறார் இவர் உற்சாகப் படபடப்புடன். நவுஷியின் மனம் கவர்ந்த முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, கட்டாய வெற்றி நெருக்கடியில் நேற்று நள்ளிரவு மெக்சிகோவை சந்தித்தது.

நகரும் வீடு

நவுஷியின் கார் ஒரு நகரும் வீடாகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் மேற்புறத்தில் கூடார வசதியும், காருக்குள் மினி சமையல்கூடமும் அமைக்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை மாவு, மசாலாக்கள் போன்ற சமையல் பொருட்களையும் போதுமான அளவு 'ஸ்டாக்' வைத்திருக்கிறார். தனக்குத் தேவையான உணவுகளை தானே சமைத்துக்கொள்கிறார்.

நாஜி நவுஷி தனது காருக்கு 'ஊலு' என்று செல்லப்பெயர் சூட்டியிருக்கிறார். இந்த மலையாள வழக்குமொழிச் சொல்லுக்கு 'அவள்' என்று பொருள்.

கால்பந்து காதலி நவுஷியை சுமந்துகொண்டு பாலைவன மண்ணில் பறந்துகொண்டிருக்கிறது, 'ஊலு'.


Next Story