பாதுகாப்பான மாநிலம் உத்தரபிரதேசம்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த யோகி ஆதித்யநாத்


பாதுகாப்பான  மாநிலம் உத்தரபிரதேசம்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 6 Jan 2023 6:48 AM IST (Updated: 6 Jan 2023 6:57 AM IST)
t-max-icont-min-icon

முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்து வருவதாக மும்பையில் யோகி ஆதித்யநாத் பேசினார்.

மும்பை.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மும்பைக்கு வருகை தந்தார். அங்கு முக்கிய பாலிவுட் பிரமுகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,

உத்தரபிரதேசத்தில் தற்போது வலுவான சட்டம் ஒழுங்கு மற்றும் சூழல் வலுவாக உள்ளது. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகிறது.

2017க்கு முன், தினமும் கலவரம் நடந்து கொண்டிருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் தற்போது மாநிலத்தில் சட்டம் மற்றும் சூழ்நிலை மிகவும் வலுவாக உள்ளது. நாங்கள் நில மாபியா எதிர்ப்பு பணிக்குழுவை உருவாக்கி, 64 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை அவர்களின் பிடியில் இருந்து மீட்டுள்ளோம்.

உத்தரபிரதேசத்தில் எந்த தொழிலதிபர் அல்லது ஒப்பந்ததாரரிடமும் வரி வசூலிக்கவோ அல்லது அவர்களை துன்புறுத்தவோ இன்று யாராலும் முடியாது. அரசியல் நன்கொடைகளை கூட வலுக்கட்டாயமாக வாங்க முடியாது,.

நாங்கள் ஏற்கனவே மாநிலத்திற்கு ரூ.7.12 லட்சம் கோடி முதலீட்டை ஈட்டியுள்ளோம். மேலும், உத்தரப் பிரதேசம் சாலைகள், ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுடன் எளிதாக இணைப்பதில் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும்.

ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட நாட்டிலேயே ஒரே மாநிலமாக விரைவில் மாறப் போகிறது. தற்போது நம்மிடம் ஒன்பது விமான நிலையங்கள் உள்ளன. நாட்டின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க் உத்தரபிரதேசத்தில் உள்ளது.

மேலும், மற்றொரு நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட்டின் முக்கிய உறுப்பினர்களூடன் பேசிய அவர், தனது மாநிலத்தை திரைப்படம் தயாரிக்கும் இடமாக ஆராய பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களை அழைத்தார்.

உத்தரப் பிரதேசம் திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும், தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் போனி கபூர், கோரக்பூர் லோக்சபா எம்.பி.யும், நடிகருமான ரவி கிஷன், போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிருவா, பின்னணி பாடகர்கள் சோனு நிகம், கைலாஷ் கெர், நடிகர் சுனில் ஷெட்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்திரபிரகாஷ் திவேதி, மதுர் பண்டார்கர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆனால், முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் போது மும்பையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் யோகி ஆதித்யநாத் எதிர்கொண்டார்.

உத்தரபிரதேச முதல் மந்திரி, தொழிலதிபர்களுடன் கலந்துரையாடலாம். ஆனால் அவரது வருகையின் போது அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதிக மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே அங்கு முதலீடு செய்ய முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story