செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணித்தது பாகிஸ்தான்


செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணித்தது பாகிஸ்தான்
x

Image courtesy: PTI

தினத்தந்தி 28 July 2022 9:36 PM IST (Updated: 28 July 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

அதன்படி, செஸ் ஒலிம்பியாட் ஜோதியை டெல்லியில் கடந்த மாதம் 19-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணம் கடந்த மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.அந்த வகையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி எடுத்து வரப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளையாட்டுடன் அரசியலை கலக்கும் இந்தியாவின் முயற்சியை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் உயர்மட்ட அளவில் எழுப்புவோம். என தெரிவித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் புறக்கணித்து உள்ளதை இந்தியா கடுமையாக விமர்சித்து உள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்த போட்டியில் கலந்து கொள்ள மாட்டோம் என பாகிஸ்தான் திடீரென முடிவு எடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வை பாகிஸ்தான் அரசியல் ஆக்கி உள்ளது. அவர்கள் அணி வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்த பிறகு இந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தான் தேவையில்லாமல் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளது. இப்போதும் அப்படித்தான். இனி எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.


Next Story