தினசரி 2 வேளை உணவுக்கு மக்கள் போராடுகின்றனர்; பாகிஸ்தானை குறிப்பிட்ட முதல்-மந்திரி ஆதித்யநாத்

பிரதமர் மோடி அரசில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் வழங்கப்படுகிறது எனவும் அண்டை நாட்டில் தினசரி 2 வேளை உணவுக்கு மக்கள் போராடுகின்றனர் என முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கவுசாம்பி,
உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் கவுசாம்பியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரூ.612 கோடி மதிப்பிலான மொத்தம் 117 வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் பேசினார்.
கவுசாம்பி மகோத்சவம் 2023 நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்து உள்ளார். இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பங்கேற்றார். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்ச்சியில், பல விளையாட்டு வீரர்களுக்கு கவுரவமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஆதித்யநாத் பேசும்போது, நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் வழங்கப்படுகிறது. ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானில், நாளொன்றுக்கு 2 வேளை உணவு கிடைப்பதற்கே மக்கள் போராடி வருகின்றனர் என கூறியுள்ளார்.
நாட்டில் எந்த வேற்றுமையும் இன்றி, வளர்ச்சி திட்ட பலன்களை அனைத்து இந்தியர்களும் பெறுகின்றனர். செல்வசெழிப்பில் நாடு புதிய உச்சங்களை எட்டி வருகிறது. நாட்டில் சிறந்த பாதுகாப்பு சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.






