வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு குறித்து பாஜக முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பாஜக ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து அந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
பாஜக தனியாகவும், பிற கட்சிகளுடன் கூட்டணியாகவும் 18 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் துணை முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ், பாஜகவின் நல்லாட்சி பிரிவு தலைவர் வினய் சஸ்ரபுத்தே ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பாஜக ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு முதல்-மந்திரியும் தாங்கள் மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களை சென்றடைந்துள்ளது, அதை எப்படி 100 சதவீதம் சென்றடைய வைப்பது என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அந்த மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தல்கள், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல்திட்டம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்), சிவராஜ்சிங் சவுகான் (மத்தியபிரதேசம்), மனோகர்லால் கட்டார் (அரியானா), பூபேந்திர படேல் (குஜராத்), ஹிமந்த பிஸ்வா சர்மா(அசாம்), புஷ்கர்சிங் தாமி (உத்தரகாண்ட்), பசவராஜ் பொம்மை (கர்நாடகா), பிரமோத் சவந்த் (கோவா) உள்ளிட்ட முதல்-மந்திரிகளும், தேவேந்திர பட்னாவிஸ் (மராட்டியம்) உள்ளிட்ட துணை முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர்.