பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு - சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி,
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தது.
இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையில், 3 நீதிபதிகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்றும், 2 நீதிபதிகள் இடஒதுக்கீடு செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.
இதனால், 3-2 என்ற பெரும்பான்மையின் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியான மறுநாள் தலைமை நீதிபதி யுயு லலித்தின் பதவிகாலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக டிஓய் சந்திர சூட் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில் 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தலைமையில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மறுசீராய்வு மனுவை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.