குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் ரோபோ...


குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் ரோபோ...
x

குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோ ஒன்றை பா.ஜ.க. களமிறக்கியுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு நூதன முறைகளில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோ ஒன்றை களமிறக்கியுள்ளது. இந்த ரோபோவை பா.ஜ.க.வின் மண்டல ஐ.டி. செல் தலைவர் ஹர்ஷத் பட்டேல் என்பவர் தயாரித்துள்ளார். இந்த ரோபோ வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் எனவும், பல தொகுதிகளில் பிரச்சாரத்திற்காக இது போன்ற ரோபோவை களமிறக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ரோபோவை பிரசாரத்தில் களமிறக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் தேசாய் கூறுகையில், "கட்சியின் சாதனைகள் மற்றும் வேட்பாளர்களை மக்களிடத்தில் அறிமுகம் செய்யும் விதமாக ரோபோவில் ஒரு டிஸ்பிளே இருக்கிறது. இதன் மூலம் வேட்பாளர்களை மக்கள் அறிந்துகொள்வார்கள். கட்சி பொதுக்கூட்டங்களிலும் இந்த ரோபோக்கள் களம் இறக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்த ரோபோ மக்களிடம் சென்று துண்டு பிரசுரங்களை வழங்குகிறது. மேலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் வகையில் இதில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பா.ஜ.க.வின் இந்த நூதன பிரச்சாரத்தை அந்த தொகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.


Next Story