டெல்லியில் 28 தமிழர்களிடம் ரூ.2.5 கோடி மோசடி; வேலை என்ற பெயரில் ரெயில்களை எண்ண விட்ட அவலம்
டெல்லியில் வேலை தருகிறோம் என கூறி ரெயில்கள், பெட்டிகளை எண்ண விட்டதுடன் தமிழர்களிடம் ரூ.2.5 கோடி வரை பணமோசடியும் நடந்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லி ரெயில் நிலையத்தில் பயண சீட்டு பரிசோதகர்கள், போக்குவரத்து உதவியாளர்கள் அல்லது கிளார்க்குகள் போன்ற பணிகள் தருகிறோம் என கூறி தமிழகத்தில் இருந்து சென்ற 28 பேரிடம் ரூ.2.5 கோடி வரை பணமோசடி செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி தமிழகத்தின் விருதுநகரை சேர்ந்த எம். சுப்புசாமி (வயது 78) என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார். இவரே, அந்த மோசடி கும்பலிடம் தமிழக வாலிபர்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.
எனினும், அவர்கள் மோசடி கும்பல் என்று தனக்கு முன்பே தெரியாமல் போய் விட்டது என்றும், அவர்களிடம் தானும் சிக்கி கொண்டேன் என்று சுப்புசாமி கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, ஓய்வு பெற்றதில் இருந்து ஊரிலுள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைப்பதற்கான உதவியை செய்து வருகிறேன். பணத்திற்காக எதுவும் செய்தது இல்லை என கூறியுள்ளார்.
அவர் அளித்த புகாரில், தமிழகத்தின் கோவையை சேர்ந்த சிவராமன் என்பவருடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டது. டெல்லி எம்.பி. குடியிருப்பில் ஒருவராக அவர் வசிக்கிறார்.
சிவராமன் தனக்கு எம்.பி. மற்றும் மந்திரிகளை நன்றாக தெரியும். வேலையில்லாத இளைஞர்களுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருகிறேன். அதற்கு செலவாகும் என்று கூறியுள்ளார்.
அதன்பின்னர், வேலை ஆட்களுடன் டெல்லிக்கு வரும்படி சிவராமன் என்னிடம் கூறினார். தொடக்கத்தில் 3 பேருடன் அவரை சந்தித்தேன். வேலைக்கான பயிற்சி என்ற செய்தி ஊருக்குள்ளும், மதுரையிலும் பரவியது.
வேலை கிடைக்கும் ஆர்வத்தில் வேறு 25 பேர் வந்து சேர்ந்தனர் என புகாரில் கூறியுள்ளார்.
ஒவ்வொருவரும் ரூ.2 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை வேலைக்கு தகுந்தது போல் சுப்புசாமியிடம் கொடுத்துள்ளனர். அவர், அந்த தொகையை விகாஸ் ராணா என்பவரிடம் கொடுத்துள்ளார். இந்த ராணா என்பவர் டெல்லியில் வடக்கு ரெயில்வேயின் துணை இயக்குனர் போல் தன்னை காட்டி கொண்டார் என்று மதுரையை சேர்ந்த பாதிக்கப்பட்ட செந்தில் குமார் (வயது 25) என்பவர் கூறியுள்ளார்.
வேலை கேட்டு வந்தவர்களில் பலரும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி முடித்தவர்கள் ஆவர். பணம் பெற்று கொண்ட பின்பு, அடுத்த நடவடிக்கையாக டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ரெயில்வே மத்திய மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்காக அழைக்கப்பட்டு உள்ளனர்.
வெவ்வேறு தேதிகளில் டெல்லி, சங்கர் மார்கெட்டில், வடக்கு ரெயில்வேயின் இளநிலை பொறியியலாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்ப்பு நடந்துள்ளது.
பயிற்சிக்கான உத்தரவு, அடையாள அட்டைகள், பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் மற்றும் பணி நியமன கடிதங்கள் என அனைத்தும் போலியானவை மற்றும் மோசடி நடந்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் சோதனையிட்ட பின்னர் தெரிய வந்துள்ளது.
ராணா எப்போதும் பணம் பெற்று கொள்ளும்போது ரெயில்வே கட்டிடத்திற்கு வெளியே அழைத்து வந்து விடுவார் என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
இதன்பின் நடந்த கொடுமையான விசயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட பல வேலைகள் இருந்தபோதும், வேலை கேட்டு வந்தவர்களிடம் பயிற்சி என்ற பெயரில் புதுடெல்லி ரெயில்வே நிலையத்தில் கடந்த ஜூன் முதல் ஜூலை வரை ஒவ்வொரு நடைமேடையிலும் இருந்து தினசரி வந்து சேர கூடிய ரெயில்கள் மற்றும் அவற்றின் பெட்டிகளை எண்ணி, வரும்படி பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்று நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் என ஒருமாதம் வரை பயிற்சி சென்றுள்ளது. புறப்பாடு, வந்து சேரும்போது என ரெயில்களின் எண்ணிக்கையை பாதிக்கப்பட்டோர் மோசடியில் சிக்கியுள்ளோம் என தெரியாமலேயே செய்து வந்துள்ளனர்.
ராணாவுடன், அவரது கூட்டாளியான துபே என்பவரும் இருந்துள்ளார். பொருளாதார குற்ற பிரிவு போலீசார், புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் இவை அனைத்தும் வேலைக்கான மோசடி என கண்டறிந்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொடர்புடைய அதிகாரிகளை எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டும் என ரெயில்வே அமைச்சகத்தின் ஊடக மற்றும் தொலைதொடர்பு கூடுதல் இயக்குனர் ஜெனரல் யோகேஷ் பவேஜா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.