தட்டம்மைக்கு 2 மகன்கள் பலியான சோகம்; 10-வது பிறந்த மகளுக்கு உடனடியாக தடுப்பூசி போட்ட தாய்


தட்டம்மைக்கு 2 மகன்கள் பலியான சோகம்; 10-வது பிறந்த மகளுக்கு உடனடியாக தடுப்பூசி போட்ட தாய்
x

மும்பையில் தட்டம்மைக்கு 2 மகன்கள் பலியான நிலையில், 10-வது பிறந்த மகளுக்கு உடனடியாக தாய் தடுப்பூசி போட்டுள்ளார்.



மும்பை,


மராட்டியத்தில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் சமீப நாட்களாக தட்டம்மை பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மத்திய குழுவும் இதனை கண்டறிய மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், மும்பை நகரில் கோவண்டி பகுதியில் வசித்து வருபவர் சாருன்னிசா கான் (வயது 38). கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 6 வாரங்களுக்கு முன் மகள் பிறந்து உள்ளார். 10-வது மகளான அதனை பாதுகாத்து வருகிறார்.

கடந்த அக்டோபரில், அவரது மகன்களான ஹஸ்னைன் (வயது 5), நூரைன் (வயது 3) ஆகிய இருவரும் தட்டம்மை பாதித்து உயிரிழந்தனர். அவர்களின் உயிரிழப்புக்கு பின்னர் 10-வது குழந்தையை சாருன்னிசா பெற்றெடுத்து உள்ளார்.

நகராட்சி ஆவண பதிவுகளின்படி, அவர் தனது எந்த குழந்தைக்கும் தடுப்பூசி போடவில்லை என தெரிகிறது. ஆனால், இந்த முறை தடுப்பூசி போடுவதில் அவர் கவனமுடன் இருந்துள்ளார்.

எனினும், கடந்த முறை தடுப்பூசி போட சென்ற அதிகாரிகளுக்கு சாருன்னிசா மறுப்பு தெரிவித்ததுடன், பல முறை அவர்களை பகையாளிகளாகவும் பார்த்து உள்ளார்.

அதனால், இந்த முறை சுகாதார குழு எதிர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் தயாராக சென்றது. ஆனால், ஆச்சரியப்படும் வகையில் சாருன்னிசா அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், உடனடியாக குழந்தையை கொண்டு வந்து தடுப்பூசி போட தயாரானார்.

இதுபற்றி அவர் கூறும்போது, குழந்தைகளின் உடல் நலனுக்கு தடுப்பூசி அவசியம். அதனை தற்போது நாங்கள் அறிந்திருக்கிறோம் என கூறியுள்ளார்.

அதிகாரி கூறும்போது, முன்பு எங்களது குழுவினரை விரட்டி, துரத்தும் நிலை காணப்பட்டது. தட்டம்மை மரண சம்பவங்களுக்கு பின்னர், தற்போது இந்த நிலைப்பாடு மாறியுள்ளது என கூறியுள்ளார்.


Next Story