வேகமாக குறையும் யமுனை ஆற்றின் நீர்மட்டம்: டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது


வேகமாக குறையும் யமுனை ஆற்றின் நீர்மட்டம்: டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது
x

டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில் அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

புதுடெல்லி,

டெல்லி, அரியானா, உத்தரகாண்ட், இமாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது கொட்டிய பேய்மழையால் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த 13-ந் தேதி ஆற்றின் நீர்மட்டம் 205.33 மீட்டர் அபாய குறியை விட 3 மீட்டர் மேலே உயர்ந்தது. அதாவது யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208.66 மீட்டராக உயர்ந்து, ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது.

இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் டெல்லியில் தாழ்வான இடங்களில் இருக்கும் குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளில் புகுந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மீண்டும் பெய்த மழையால் அச்சம்

இதனிடையே சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து தடைப்பட்டது. வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த சூழலில் டெல்லியில் மழை நின்றதால் 14-ந் தேதி மாலையில் இருந்து யமுனை ஆற்றில் நீர்மட்டம் குறைய தொடங்கியது. மணிக்கு 1 செ.மீ. வேகத்தில் தண்ணீர் குறைந்து வருவதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் மாலை டெல்லியின் ஒரு சில இடங்களில் மீண்டும் மழை பெய்தது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடுமோ என அஞ்சப்பட்டது.

இயல்பு நிலை திரும்பி வருகிறது

ஆனால் நல்வாய்ப்பாக யமுனை ஆற்றின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது. அதன்படி நேற்று மதியம் 1 மணியளவில் நீர்ட்டம் 205.85 மீட்டராக குறைந்தது.

யமுனை ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வரும் அதே வேளையில் பல இடங்களில் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனால் டெல்லியில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கடைகளை இழந்து நிவாரண முகாம்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி வருகின்றனர். அதேபோல் சாலைகளில் குளம் போல் தேங்கியிருந்த வெள்ள நீர் வடிந்துள்ளதால் போக்குவரத்து மெல்ல, மெல்ல சீரடைந்து வருகிறது.

நிவாரண முகாமில் கெஜ்ரிவால்

அதேபோல் யமுனை ஆற்றில் நீர்மட்டம் குறைந்து வருவதை தொடர்ந்து, யமுனா பேங்க் மெட்ரோ ரெயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 13-ந் தேதி யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய குறியை தாண்டியதும் யமுனா பேங்க் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் நுழைய தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வடக்கு டெல்லியின் மோரி கேட் பகுதியில் உள்ள நிவாரண முகாமுக்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தார்.

அரசின் சிறப்பு முகாம்

அதை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "டெல்லியில் இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பி வருகிறது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் ஆதார் அட்டை மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் அடித்துச் செல்லப்பட்டவர்களுக்காக அரசு சிறப்பு முகாம்களை அமைக்கும்.

அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு ஆடைகள் மற்றும் புத்தகங்கள் மீண்டும் கிடைக்க ஏற்பாடு செய்வோம்" என தெரிவித்தார்.


Related Tags :
Next Story