மும்பையில் 2 மாதத்தில் காற்று மாசு குறையும்; மந்திரி தீபக் கேசர்கர் உறுதி


மும்பையில் 2 மாதத்தில் காற்று மாசு குறையும்; மந்திரி தீபக் கேசர்கர் உறுதி
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:45 PM GMT)

மும்பையில் 2 மாதங்களில் காற்று மாசு குறையும் என மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

மும்பை

மும்பையில் 2 மாதங்களில் காற்று மாசு குறையும் என மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.

காற்று மாசு பிரச்சினை

மும்பையில் சமீப காலமாக காற்று மாசு அதிகமாக உள்ளது. தூரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் தெரியாத அளவுக்கு காற்றில் தூசி படர்ந்து உள்ளது. காற்று மாசு காரணமாக நகரில் முதியவர்கள், குழந்தைகள் சுவாசப்பிரச்சினை மற்றும் இருமல், சளி பிரச்சினையால் அவதி அடைந்து வருகின்றனர். காற்று மாசை குறைக்க மும்பை மாநகராட்சி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இதற்கான வழிகாட்டுதலை மும்பை மாநகராட்சி வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

திறந்தவெளியில் எரிக்க தடை

மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் திறந்வெளியில் எந்த பொருளையும் எரிக்க தடைவிதிக்கப்படுகிறது. குறிப்பாக குப்பை கிடங்குகள், குப்பை எரிக்க வாய்ப்பு உள்ள இடங்களில் குப்பையை எரிக்க கூடாது. ஜி.பி.எஸ் கருவிகள் உள்ள வாகனங்கள் மூலம் மட்டுமே கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். சுத்தமான டயர்களுடன் இயக்கப்படுவதை உறுதி செய்யவும், அதிக சுமை எடுத்து செல்லப்படுவதை தடுக்கவும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 70 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் 35 அடி உயரத்துக்கு கண்டிப்பாக தகர தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

கட்டுமான பணிகள், கட்டிடங்கள் இடிக்கும் பணி நடக்கும் இடங்கள் பச்சை நிற துணி, தார்பாயால் மூடப்பட வேண்டும். கட்டிடங்கள் இடிக்கப்படும் இடங்களில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும். பாலம், மேம்பாலம், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் 25 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு இருக்க வேண்டும். கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை கண்காணிக்க வார்டுேதாறும் 2 என்ஜினீயர், போலீஸ்காரர், மார்ஷல் ஒருவர் அடங்கிய குழுவை வாா்டு அதிகாரிகள் அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 மாதங்களில் மாசு குறையும்

இந்தநிலையில் காற்று மாசை தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மும்பை பொறுப்பு மந்திரி தீபக் கேசர்கர் கூறியதாவது:-

காற்று மாசை குறைக்க மும்பை மாநகராட்சி நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. 2 மாதங்களில் நகரில் காற்று மாசு குறையும். இதற்கான நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது. மும்பையில் மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள், காற்று மாசை குறைப்பதற்கான முயற்சியில் ஒத்துழைப்பதாக உறுதி அளித்து உள்ளன. மும்பை மக்களுக்கு சுத்தமான காற்றை வழங்குவது அரசின் பொறுப்பாகும். இதேபோல 'போதை பொருள் இல்லாத மும்பை' நடவடிக்கையும் தொடங்கி உள்ளது. மும்பையை அழகான, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான நகராக உருவாக்குவது தான் எங்கள் நோக்கம். அதற்கு நகரை போதை பொருள் இல்லாததாக வைத்திருப்பது அவசியம். இந்த விழிப்புணர்வில் பள்ளி, கல்லூரிகள், மாணவர்களையும் ஈடுபடுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story