குண்டும், குழியுமான சாலையால் 15 கி.மீ. சுற்றிச்செல்லும் பொதுமக்கள்


குண்டும், குழியுமான சாலையால் 15 கி.மீ. சுற்றிச்செல்லும் பொதுமக்கள்
x

கே.புதுப்பட்டி அருேக குண்டும், குழியுமான சாலையால் 15 கி.மீ. பொதுமக்கள் சுற்றிச்செல்லும் அவல நிலை உள்ளது. வாகனங்களில் செல்வதற்கு கூடுதல் கட்டணம் கேட்பதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

15 கி.மீ. சுற்றி...

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி -ஏம்பல் கொசவபட்டி பிரிவு சாலையில் இருந்து ஏத்தநாடு மாரியம்மன் கோவில் கீழாநிலைகோட்டை இணைப்பு சாலை வரை குண்டும், குழியுமான நிலையில் உள்ளது. ஏத்தநாடு, பெருந்தாங்குடி, வம்பரம்பட்டி, வெள்ளிப்பட்டி, முள்ளக்காடு, பில்லகுடியிருப்பு, கள்ளுத்தோப்பு, வேமுனி ஏத்தல், பெரியகோட்டை, பெத்தான்குடியிருப்பு, மாவடிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த சாலை போட்டு சுமார் 17 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் சாலை மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கின்றது.

அதிக கட்டணம்

மேலும் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் அவ்வப்போது கீழே விழுந்து காயம் ஏற்படுகின்றது. மேலும் இந்த கிராமங்களுக்கு ஆட்டோ, வேன், ஆம்புலன்ஸ் போன்ற வாகன ஓட்டிகள் வருவதற்கு தயங்குகின்றனர். சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அதிக கட்டணங்கள் தந்தால் மட்டுமே ஊருக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிலர் மேடு பள்ளம் தெரியாமல் சாலையில் விழுந்து விடுகின்றனர். இந்த கொசவபட்டி கிராமத்தில் இருந்து தான் கே.புதுப்பட்டி சுற்றியுள்ள ஐந்து அய்யனார் கோவில்களுக்கு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மண்ணாலான குதிரைகளை எடுத்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பொழுதும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

போராட்டம் நடத்தப்படும்

இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர்களுக்கும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எப்பொழுது கேட்டாலும் சாலை வந்துவிடும், சாலை வந்துவிடும் என்ற ஒரே பதிலை மட்டுமே உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்படுவதாகவும், சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் இப்பகுதிக்கு வியாபாரிகள் கூட வர யோசனை செய்கின்றனர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும். இல்லை என்றால் சாலை மறியல் செய்ய போவதாக பொதுமக்கள் போலீசாரிடம் முன் அனுமதி கேட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் 6 மாதத்துக்குள் சாலை செப்பனிடப்படும் என்று அதிகாரிகள் கூறி சில ஆண்டுகள் ஆகியும் இதுவரை சாலையை செப்பனிட வில்லை.

உடனடியாக புதிய தார்சாலை அமைக்க வில்லை என்றால் கிராமமக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தவும் தயாராக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமும் 500-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.


Next Story