எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு


எடப்பாடி பழனிசாமியுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Nov 2019 11:48 PM GMT (Updated: 17 Nov 2019 11:48 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொல்.திருமாவளவன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அந்தக் கூட்டணியிலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது. இடையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேறச் சொன்னதாக தகவல்கள் பரவியது. ஆனால், அது வதந்தி என்பதை மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பின் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உறுதி செய்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை திடீரென முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். சுமார் ½ மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

முதல்-அமைச்சருடனான சந்திப்பு குறித்து தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தமிழக அரசு ஈடுகட்டி வழங்க வேண்டும் போன்ற அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவு கவலையும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. முள்ளி வாய்க்கால் படுகொலையை அரங்கேற்றிய கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றிருப்பது அங்கு வசிக்கும் தமிழக மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஈழ படுகொலை விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் போய் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சி (தி.மு.க.) கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்து பேசியது பல்வேறு யூகங்களுக்கு இடம் கொடுத்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்திருக்குமோ? என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Next Story