ராமேசுவரம் மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம் மீனவர்கள் கைது: டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன் பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்கள் 23 பேரை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் 2 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவையொட்டிய இந்திய கடல் எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கடந்த மாதத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களில் பலர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டு விட்ட நிலையில் 18 மீனவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே மேலும் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும்.

இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியது. அதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும் இலங்கை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் நுழைவதை தவிர்க்க முடியாது. அதனால் தமிழக மீனவர்களும், இந்திய மீனவர்களும் காலம் காலமாக எந்தெந்த பகுதிகளில் மீன்பிடித்து வந்தார்களோ, அதே பகுதியில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பது தான் சரியானதாகும்.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com