திருவண்ணாமலை கோவில் அருகே கட்டுமானப் பணிகளுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு


திருவண்ணாமலை கோவில் அருகே கட்டுமானப் பணிகளுக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவிலின் ராஜகோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படாது என அறநிலையத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சென்னை,

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கட்டுமானப் பணிகளால் அருணாச்சலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், கட்டிடப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோவில் ராஜகோபுரம் எதிரில் சுமார் ரூ.6 கோடி செலவில் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் 150 கடைகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாகவும், இதனால் கோவிலின் ராஜகோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் விளக்கமளித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோபுரத்தை மறைக்கும் வகையில் அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story