நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டுவதா? கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.


நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டுவதா? கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.
x

நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டிய கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உண்மை பேசவேண்டிய நிர்ப்பந்தம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ந்தேதி நடந்த சம்பவம் பற்றி, சில உண்மைகளை வெளிப்படையாக பேச வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. என்னுடைய தூண்டுதலின்பேரில் தான், அந்த சம்பவமே நிகழ்ந்தது என்பது போல் ஜோடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அன்றைய தினம், என்னுடைய தொகுதியைச் சேர்ந்த தொண்டர்கள், சத்தியமூர்த்தி பவன் வளாகத்துள்ளேயே குண்டர்களால் திட்டமிட்டு தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கட்சிக்காக உழைக்காமல் சுயநலத்தோடு செயல்படும் கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கட்சிக்காக பாடுபடும் ஒருவரையே மாவட்டத் தலைவராக நியமிக்க வேண்டும்.

அதேபோல், வட்டாரத் தலைவர் பதவிகளுக்கும் கட்சிக்காக உழைத்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்கிற, தங்களது நியாயமான கோரிக்கைகளை நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடந்த பல மாதங்களாகவே வலியுறுத்தி வருகிறார்கள்.

குண்டர்களை வைத்து தாக்குதல்

உரிமையை முறையிட வந்த அந்தத் தொண்டர்களை குண்டர்களை வைத்து, உருட்டுக்கட்டைகளால் ஓட ஓட விரட்டித் தாக்கி காயப்படுத்திய கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயலை யாரும் நியாயப்படுத்திவிட முடியாது. ஆனால், தொண்டர்களை நான்தான் அழைத்து வந்தேன், போராட்டம் செய்யத் தூண்டினேன் என்றெல்லாம் கூறுவது அப்பட்டமான பொய்.

என்னையும் தாக்க திட்டம்

கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் என்னையும் தாக்க திட்டமிட்டு இருந்தார்கள். இதையும் வெளிப்படையாக சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, என்னை கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்ய தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரியால் கட்சிக்கு அவப்பெயர்

சம்பவம் நிகழ்ந்த அன்று நிஜமாகவே என்ன நடந்தது? என்பது ஒரு சில மாவட்டத் தலைவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், வேண்டும் என்றே, பழி வாங்கும் நோக்கத்துடன் எல்லா மாவட்டத் தலைவர்களிடமும் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் அந்த கடிதத்தை வழங்கி இருக்கிறார்.

இதன்மூலம், தமிழக காங்கிரஸ் என்னுடைய முழு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி, 'என்னை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது' என்று, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கே.எஸ்.அழகிரி. அவரது செயல்பாடுகளால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கே அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

கார்கேவிடம் புகார்

நியாயத்தைக் கேட்டு முறையிட வந்த கட்சி தொண்டர்களை கைநீட்டி அடிக்கும் இவரை, உண்மை காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் மன்னிக்க மாட்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைமையும் அவரை மன்னிக்காது.

தொண்டர்களின் நியாயமான கோரிக்கைகளையும், கே.எஸ்.அழகிரியின் பழிவாங்கும் போக்கையும் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடமும், சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரிடமும் நிச்சயமாக தெரிவிப்பேன். தர்மமும், நியாயமும் ஒருநாள் வென்றே தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story