பள்ளிக்கரணை சாலை தடுப்பு சுவரில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - பெண் ஐ.டி. ஊழியர் பலி

பள்ளிக்கரணையில் சாலை தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதி கவிழ்ந்தது. இதில் பெண் ஐ.டி. ஊழியர் பலியானார்.
பள்ளிக்கரணை சாலை தடுப்பு சுவரில் மோதி அப்பளம் போல் நொறுங்கிய கார் - பெண் ஐ.டி. ஊழியர் பலி
Published on

சென்னை,

சொகுசு காரில் பயணம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (வயது 24). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று காலை கிருத்திகா அருணா, தன்னுடன் பணியாற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26), அபிஷா (23), பங்கஜ் (19) ஆகியோருடன் சொகுசு காரில் சென்னையை சுற்றிப்பார்க்க புறப்பட்டு சென்றார்.

காரை ஸ்ரீதர் ஓட்டினார். அவருக்கு அருகில் பங்கஜும், பின் இருக்கையில் கிருத்திகா அருணா, அபிஷா ஆகியோரும் அமர்ந்து பயணம் செய்தனர்.

சாலையில் கவிழ்ந்தது

துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே வேகமாக வந்த சொகுசு கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

பெண் ஐ.டி. ஊழியர் பலி

தடுப்பு சுவரில் மோதியபோது காரின் கதவுகள் தானாக திறந்து கொண்டது. இதில் பின்னால் அமர்ந்து இருந்த கிருத்திகா அருணா, காரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

மற்ற 3 பேரும் இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் சாலையில் கவிழ்ந்த காரை மீட்டனர்.

பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், காரில் இருந்து தூக்கி வீடப்பட்டு படுகாயமடைந்த கிருத்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com