மாவட்டத்தில் இதுவரை ரூ.1½ கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்பு- போலீஸ் சூப்பிரண்டு தகவல்


மாவட்டத்தில் இதுவரை ரூ.1½ கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்பு- போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x

மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.1½ கோடி மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கூறினார்.

மதுரை


ரூ.1½ கோடி செல்போன்கள்

மதுரை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள், சைபர் கிரைம் போலீசார் மூலம் அவ்வப்போது மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2 மாதத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் ரூ.16 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் முன்னிலையில், அதன் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதுகுறித்து, போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.1 கோடியே 75 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்புள்ள 1,207 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதனமான முறையில் நடந்த சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் இதுவரை ரூ.48 லட்சத்து 76 ஆயிரத்து 305 உரியவர்களுக்கு அவருடைய வங்கிக் கணக்கில் திரும்ப கிடைக்குமாறு வழங்கப்பட்டுள்ளது.

ஓ.டி.பி.யை தெரிவிக்காதீர்கள்

இதுபோல் மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும், ரகசிய எண், வங்கி கணக்கு எண், சி.வி.வி. எண் மற்றும் ஓ.டி.பி. போன்ற விவரங்களை முன்பின் தெரியாதவரிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். பண இரட்டிப்பு வாக்குறுதி அளிக்கும் இணையதள செயலிகளை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். குறைந்த அசலுக்கு அதிக வட்டி பெறும் ஆன்லைன் லோன் செயலிகளிடம் பணம் பெற்று ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால் போன்றவற்றையும் எடுக்க வேண்டாம். வங்கி கணக்கு விவரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்கை தொடவேண்டாம். இதுபோன்ற நூதன மோசடியில் யாரேனும் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கும், https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story