முதியோருக்கு உதவிக்கரம் நீட்டிய போலீஸ் கமிஷனர்; வாடகை கொடுக்காதவர்களை வீடுகளை காலி செய்ய ஏற்பாடு


முதியோருக்கு உதவிக்கரம் நீட்டிய போலீஸ் கமிஷனர்; வாடகை கொடுக்காதவர்களை வீடுகளை காலி செய்ய ஏற்பாடு
x

வாடகை கொடுக்காதவர்களை, வீடுகளை காலி செய்ய செய்து, முதியோருக்கு போலீஸ் கமிஷனர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை

சென்னை கோடம்பாக்கம் சுப்பராயன் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 82). இவர் தன்னுடைய மனைவி லலிதாவுடன் (72) வசித்து வருகிறார். இவர், தனக்கு சொந்தமான 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். ஆனால் வாடகைக்கு குடியிருந்தவர்கள் வீட்டு வாடகை தொகையை ஒழுங்காக கொடுக்காமலும், வீடுகளை காலி செய்ய மறுத்தும், தகராறில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் சரவணன் தவித்த நிலையில் காணப்பட்டார்.

தனக்கு ஏற்பட்ட நிலைமையை எடுத்து சொல்லி உரிய உதவிகளை செய்யும்படி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம், சரவணன் முறையிட்டார். சரவணனுக்கு உரிய உதவி செய்வதாக கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உறுதி அளித்தார்.

சரவணனுக்கு உரிய உதவி செய்யும்படி தியாகராயநகர் துணை கமிஷனர் அங்கிட் ஜெயினுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். துணை கமிஷனர் அங்கிட் ஜெயின், சரவணன் வீட்டுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

வாடகை கொடுக்காத வாடகைதாரர்கள் 3 பேரையும் நேரில் சந்தித்து பேசினார். வீடுகளை காலி செய்யுங்கள் அல்லது வாடகை தொகையை ஒழுங்காக கொடுங்கள் என்று துணை கமிஷனர் கேட்டுக்கொண்டார். துணை கமிஷனரின் ஆலோசனையை ஏற்ற வீட்டு வாடகைதாரர்கள் 3 பேரும் வீடுகளை ஒரு மாதத்தில் காலி செய்வதாக உறுதி அளித்தனர். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாகவும் வாக்குறுதி கொடுத்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையால் சரவணன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு நன்றி தெரிவித்தார்.

இதேபோல அடையாறு பரமேஸ்வரி நகரை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி (78) என்ற முதியவருக்கும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

வாடகை கார் டிரைவர் ஒருவர் தான் பேசிய தொகையைவிட அதிக பணம் கேட்டு நரசிம்ம மூர்த்தியிடம் மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். கமிஷனரின் உத்தரவின்பேரில் அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நரசிம்ம மூர்த்தியின் பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

அதிக கட்டணம் கேட்ட வாடகை கார் டிரைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அவரும் அதிக தொகை வேண்டாம் என்று மன்னிப்பு கோரியுள்ளார். இதற்காக நரசிம்ம மூர்த்தியும், போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story