மார்க்கெட்டுகளில் குவிந்த பொதுமக்கள்


தினத்தந்தி 22 Oct 2023 11:30 PM GMT (Updated: 22 Oct 2023 11:30 PM GMT)

ஆயுத பூஜையையொட்டி ஊட்டி மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள், பூக்கள் விலை உயர்ந்தாலும் ஆர்முடன் வாங்கிச்சென்றனர்.

நீலகிரி

ஆயுத பூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் தொழில் நிறுவனங்களிலும், வீடுகளிலும் பொதுமக்கள் பூஜை செய்வார்கள். ஆயுத பூஜையின் போது பொதுமக்கள் பூக்கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண்டல் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபாடு செய்வார்கள். இதனால் பூஜை பொருட்கள் மற்றும் பூக்கள், பழங்கள் வாங்க ஊட்டி மார்க்கெட் மற்றும் சாலைகளில் நேற்று முன்தினமும், நேற்றும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் அப்பர் பஜார், லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை முதலே மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வாகனங்களை நெரிப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். கூட்டத்தை பயன்படுத்தி பொருட்கள் திருடு போக வாய்ப்பு உள்ளதால் போலீசார் சாதாரண உடையில் ரோந்து வந்த வண்ணம் இருந்தனர். மேலும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும், கீழே பணம் அல்லது பொருள் விழுந்துவிட்டது என்று யாராவது கூறினால் குனிந்து அவற்றை எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினர்.


இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று உயர்ந்தது. வரத்து குறைந்து, விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்து பூக்களை வாங்கிச் சென்றனர்.

இதன்படி கடந்தவாரம் ரூ.1,000-க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை நேற்று ரூ.2,000-க்கு விற்கப்பட்டது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் சற்று உயர்ந்தன. முல்லை மற்றும் ஜாதிப்பூ கிலோ ரூ.1,200-க்கும், ஆயுத பூஜைக்கு அதிகம் விற்பனையாகும் செண்டுமல்லி ரூ.200-க்கும் விற்பனையானது. அரளி கிலோ ரூ.600, சம்பங்கி ரூ.400, பட்டன் ரோஸ் ரூ.200, கோழிக்கொண்டை ரூ.150, மரிக்கொழுந்து, துளசி ரூ.60-க்கு விலை போனது.

இதேபோல் எலுமிச்சை, பூசணிக்காய், பொரி, அவல், சுண்டல் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனையும் அதிக அளவில் நடந்தது. மேலும் சுவாமிகளின் படங்கள், அலங்காரத்துக்கான வண்ண காகிதங்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர். ஒரு படி (பக்கா) பொரி ரூ.10-க்கு விற்பனையானது. பழங்களில் திராட்சை மட்டும் விலை அதிகரித்துள்ளது.

ஆப்பிள் ஒரு கிலோ ரூ.140-க்கும், மாதுளை ரூ.180-க்கும், ஆரஞ்சு ரூ.80-க்கும், திராட்சை ரூ.160-க்கும், சாத்துக்குடி ரூ.80, செவ்வாழை ரூ.80, அன்னாசி ரூ.80-க்கும் விற்பனையானது.

மேலும் கரும்பு ஒரு ஜோடி ரூ.160 முதல் 180-க்கும், வாழை கன்று ஒரு ஜோடி ரூ.50-க்கும் விலை போனது. மா- இலை மற்றும் வேப்ப இலை சிறிய கட்டு ரூ.20-க்கு விலை போனது.


ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால், அந்த வருடம் முழுவதும் தொழில் நிலை சிறப்படைந்து நன்றாக செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. எனவே அதற்குரிய வேலைகளில் சிலர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் நேற்று மாலை முதல் வாகனங்களை பழுது நீக்கும் கடைகளிலும், வீடுகளிலும் சுத்தம் செய்து நாளை (செவ்வாய்க்கிழமை) பூஜைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.இதேபோல் காலையில் உழவர் சந்தையிலும் பொதுமக்கள் திரளாக வந்து தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர். ஆயுத பூஜைக்கு வியாபாரம் மும்முரமாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான புதிய கருவிகளை நேற்றைய தினம் அதிக அளவில் வாங்கி கொண்டு சென்றனர்.


Next Story