குருபரப்பள்ளி அருகே லாரி மோதி விவசாயி பலி


தினத்தந்தி 3 Jun 2023 5:30 AM GMT (Updated: 3 Jun 2023 5:30 AM GMT)
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே தனியார் கல்குவாரிக்கு சென்ற லாரி மோதி விவசாயி இறந்தார். போலீசாரால் விபத்து ஏற்பட்டதாக கூறி முதியவரின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த புரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி ராவ் (வயது 70), விவசாயி. இவர் நேற்று மதியம் குருபரப்பள்ளிக்கு விவசாய பொருட்கள் வாங்குவதற்காக மொபட்டில் வந்துள்ளார். மதியம் 3 மணியளவில் நெடுஞ்சாலை அருகே வந்த போது எதிரில் வேகமாக வந்த தனியார் கல்குவாரி லாரி சிவாஜி ராவின் மொபட்டில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி இறந்தார்.

சாலைமறியல்

இதனிடையே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், தனியார் கல்குவாரி லாரியை மாமுல் கேட்டு மடக்கியதால், லாரி வேகமாக சென்றதாகவும், அதனாலேயே விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் கூறி, சிவாஜி ராவின் உறவினர்கள் நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார், சிவாஜி ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லவில்லை.

பேச்சுவார்த்தை

சாலை விதிகளை மதித்து, ஹெல்மெட் அணிந்து வந்த விவசாயி போலீசாரால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் விடுத்த கோரிக்கைகளான, வேகமாக ஓடும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விபத்துக்கு காரணமான போலீசார் குறித்து விசாரிக்க வேண்டும் ஆகியவை குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். நேற்று மாலை நடந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் குருபரப்பள்ளி நெடுஞ்சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story