திருச்சியில் உடல் உறுப்புகளை தானம் செய்த பாதிரியார், ஆட்டோ டிரைவருக்கு அரசு மரியாதை


திருச்சியில் உடல் உறுப்புகளை தானம் செய்த பாதிரியார், ஆட்டோ டிரைவருக்கு அரசு மரியாதை
x

திருச்சியில் உடல் உறுப்புகளை தானம் செய்த பாதிரியார், ஆட்டோ டிரைவருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திருச்சி

பாதிரியார்

திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான திருஇருதய மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியராக இருந்து வந்தவர் பாதிரியார் பிரான்சிஸ் சேவியர். இவர் கடந்த 22-ந்தேதி பள்ளியில் நடந்த கூட்டத்தில் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்த அவர், மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதையடுத்து, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இன்று (வியாழக்கிழமை) காலை அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

ஆட்டோ டிரைவர்

திருச்சி உக்கடை அரியமங்கலம் புங்களாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் பாபு (வயது 38), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 24-ந் தேதி இரவு அரியமங்கலம் பால்பண்ணை அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில் பாபு படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாபு இறந்தார்.

அரசு மரியாதை

இதனைதொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு இறுதி அஞ்சலி செலுத்த அவரது உடல் வீட்டிற்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. அங்கு தமிழக அரசின் அரசாணைப்படி திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ், அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவனந்தம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பாபுவின் குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆறுதல் கூறினார். அப்போது பாபுவின் தாயார் தனது இளைய மகனுக்கு அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். அதன்பின்னர் பாபுவின் உடல் ஓயாமரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.


Next Story