பர்கூர் மலைப்பகுதியில் இடி- மின்னலுடன் பலத்த மழை:ஈரெட்டி பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு
பர்கூர் மலைப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில், இங்குள்ள ஈரெட்டி பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்
பர்கூர் மலைப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததில், இங்குள்ள ஈரெட்டி பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கடையரெட்டி, ஈரெட்டி, தேவர்மலை, எலச்சிபாளையம், எப்பத்தான்பாளையம், வெள்ளிமலை, மடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 5 மணி வரை நீடித்தது. இதனால் அங்குள்ள ஈரெட்டி பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெள்ள நீரில் ஏராளமான மரங்கள் அடித்து செல்லப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
ஈரெட்டி பள்ளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு பஸ், கார், லாரி, சரக்கு வேன் உள்பட எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ரோட்டின் ஒரு கரையில் வாகனங்களுடன் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பொதுமக்கள் காத்திருந்து வெள்ளம் வடிந்த பின்னர்தான் சென்றனர். 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மலைக்கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டனர்.