திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்


திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டி முதியவர் படுகாயம்
x

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 80). வாய்பேச முடியாத இவர் நேற்று காலை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடீரென சுந்தரத்தை கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில், நிலைகுலைந்த அவர் சாலையில் விழுந்தார். இதில், அவரது தலை மற்றும் கை, கால்களில் பலத்த அடிபட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சுந்தரத்தை மீட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஐஸ் அவுஸ் போலீசாரும், சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக அப்பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை வாகனங்கள் மூலம் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. 5 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது, அப்பகுதியில் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் சிலர் மாநகராட்சி ஊழியர்களிடம் மாடுகளை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைக்கண்ட மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க வரும் மாநகராட்சி ஊழியர்களை தடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சுந்தரத்தை நேரில் சென்று பார்வையிட்டு உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், கமிஷனர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாட்டின் உரிமையாளர்கள் சரியாக பராமரிக்காததால் மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. எனவே, சென்னை மாநகராட்சி எக்காரணத்தைக் கொண்டும் மாட்டின் உரிமையாளர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காது.

கடந்த மாதம் நடந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் முதல் தடவை பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், 2-வது தடவை பிடிபட்டால் ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

15 மண்டலங்களிலும் இதுவரை 3 ஆயிரத்து 737 மாடுகளை பிடித்துள்ளோம். உரிமையாளர்கள் மாடுகளை பிடிக்க வரும் ஊழியர்களை தடுத்தால் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை கண்டால் 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story