சிறையில் சாராய ஊறல் விவகாரம்: கோர்ட்டு வளாகத்தில் கைதிகள் திடீர் தர்ணா


சிறையில் சாராய ஊறல் விவகாரம்: கோர்ட்டு வளாகத்தில் கைதிகள் திடீர் தர்ணா
x

சிறையில் சாராய ஊறல் விவகாரம் தொடர்பாக, கோர்ட்டு வளாகத்தில் கொலை வழக்கு கைதிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சுமார் 850-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைதிகள் சிலர் சாராய ஊறல் போடப்பட்டதாக எழுந்த சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக சிறையில் உள்ள 7-வது பிளாக் பகுதியில் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் திராட்சை பழம், வெல்லம் உள்ளிட்டவைகளை போட்டு, அந்த பாட்டிலை சாக்குப்பையால் சுற்றி புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், கொலை வழக்கு கைதியான கரூரை சேர்ந்த மாங்கா பிரபு (வயது 39) என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சிறை அதிகாரிகள் தனி அறையில் வைத்து விசாரித்தனர். இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த கைதி மாங்கா பிரபு மற்றும் அவரது கூட்டாளிகளான சேலம் வீராணத்தை சேர்ந்த அய்யனார் (27), அய்யந்துரை (27) ஆகிய 3 பேரையும் நேற்று ஆயுதப்படை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

அப்போது கோர்ட்டு வளாகத்திற்கு சென்றபோது கைதிகள் பிரபு உள்ளிட்ட 3 பேரும் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் அவர்களிடம் கைதி மாங்கா பிரபு கூறும்போது, 'சிறையில் சாராய ஊறல் போட்டதாக என் மீது சந்தேகப்பட்டு தனி அறையில் அடைத்து வைத்துவிட்டனர். ஆனால் நான் சிறைக்குள் ஊறல் எதுவும் போடவில்லை. எனவே, சிறைத்துறை அதிகாரிகள் உடனே இங்கு வரவேண்டும்' என்றார்.

பின்னர் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில், கைதிகள் அய்யனார், அய்யந்துரை ஆகியோர் சமாதானமடைந்து அங்கிருந்து எழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி போலீசார், கைதி பிரபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரையும் தர்ணா போராட்டத்தை கைவிட சம்மதிக்க வைத்தனர். தொடர்ந்து கைதிகள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிறையில் ஊறல் போடப்பட்டதாக கூறப்படும் சர்ச்சை குறித்து கைதிகள் 3 பேர் சேலம் கோர்ட்டு வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story