மார்ச் 1-ந்தேதி அ.தி.மு.க. பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - தலைமைக் கழகம் அறிவிப்பு

அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற மார்ச் 1-ந்தேதி எழும்பூரில் உள்ள ஓட்டலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமியின் ஆணைப்படி, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்திடும் வகையில், தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து "தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்" வருகின்ற 1.3.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள "ஓட்டல் இம்பிரியல் சிராஜ் மஹாலில்" (எழும்பூர் ரயில் நிலையம் அருகில்) நடைபெற உள்ளது.

தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்று, "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி K. பழனிசாமி ஆகியோரது கழக ஆட்சிகளில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களையும்; விடியா திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும்; விடியா அரசு மக்களுக்கு இழைத்து வரும் பல்வேறு துரோகங்களையும்" பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம், தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com