டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலேயே பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
Published on

சென்னை,

'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என டெட் தேர்வு பட்டதாரிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் டெட் தேர்வுக்கு பிறகு வேலைவாய்ப்பைப்பெற மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த அரசாணை ரத்து செய்யப்படும் என தி.மு.க. அரசு தெரிவித்திருந்த நிலையில், அதே அரசாணையை பின்பற்றி போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு பள்ளிகளில் 2,222 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு ஜனவரி 7-ந்தேதி நடைபெறும் எனவும், இதற்கான ஆன்லைன் பதிவு நவம்பர் 1-ந்தேதி(நாளை) தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், டெட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் டெட் தேர்வு பட்டதாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, கோர்ட்டு உத்தரவின் அடிப்படையிலேயே பணி நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனை டெட் பட்டதாரிகள் சங்கத்தினர் ஏற்காத நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து டெட் பட்டதாரிகள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட போட்டித்தேர்வு அறிவிப்பிற்கு தடை ஆணை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com