முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பு கூறினார்.
ஆத்தூர்:-
தம்மம்பட்டி நடுவீதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 69). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியில் உள்ளது. இவரது விவசாய நிலத்தின் அருகில் வசிப்பவர் ராமராஜ் (53). விவசாயிகளான இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி நிலத்தகராறு முற்றியதில், ஆண்டியப்பன் குத்துக்கோல் எனப்படும் ஆயுதத்தால் ராமராஜின் மார்பில் பலமாக குத்திக்கொல்ல முயன்றார். இதில் படுகாயம் அடைந்த ராமராஜ், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.
தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட விவசாயி ஆண்டியப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பு கூறினார்.