ஆயுத பூஜைக்கான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்


ஆயுத பூஜைக்கான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்
x

ஆயுத பூஜைக்கான பொருட்களை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கினர்.

அரியலூர்

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். இந்த ஆண்டு ஆயுதபூஜை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் பொதுமக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள், அவல், பொரி, சுண்டல், வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு பூஜை செய்து, வழிபாடு நடத்துவார்கள்.

இதை முன்னிட்டு அரியலூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு கடைவீதிகளில் வியாபாரம் களை கட்டியது. மார்க்கெட் தெரு, பஸ் நிலையம், தேரடி, சின்னக் கடைத்தெரு, பெரிய கடைத்தெரு உள்பட அனைத்து இடங்களிலும் வாழைக்கன்றுகள், பூசணிக்காய், பொரி, பழங்கள், மாலைகள் விற்பனை செய்யும் கடைகள் அதிக அளவில் வைக்கப்பட்டிருந்தன. வழக்கமாக ஆயுத பூஜை சமயத்தில் மழை பெய்து கொண்டிருக்கும். ஆனால் நேற்று வானில் மேகமூட்டமின்றி, வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்க கடைகளுக்கு வந்தனர்.

மேலும் நேற்று வாரச்சந்தை நடந்ததாலும், ஆயுத பூஜைகள் பொருட்கள் வந்த பொதுமக்களாலும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இதில் அரியலூர் பஸ் நிலையம்-கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, உழவர் சந்தை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பூஜைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் பல்வேறு கடைகள் புதிதாக அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். கடந்த ஆண்டை விட பூக்கள் மற்றும் பூஜை பொருட்களின் விலை சற்று அதிகரித்தே காணப்பட்டது. இருப்பினும் விற்பனை ஜோராக நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story