நான்கு வழிச்சாலை பகுதியில் குப்பை,மண் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
உடுமலையில் நான்கு வழிச்சாலை பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
உடுமலையில் நான்கு வழிச்சாலை பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நான்கு வழிச்சாலை
உடுமலை நகராட்சிக்குட்பட்ட பொள்ளாச்சி சாலை, பழனி சாலை, ராமசாமி நகரில் இருந்து அரசுகலைக்கல்லூரிக்கு செல்லும் சாலை உள்ளிட்ட சில சாலைகளில் ஆங்காங்கு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. சில நேரங்களில் குப்பைகளுக்கு தீயும் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் பகுதியிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
உடுமலை அருகே பொள்ளாச்சி சாலையில் இருந்து மடத்துக்குளம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பகலில் ஆட்கள் வேலை செய்து வரும் நிலையில் இரவு நேரத்தில் யாரோ லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் எங்கிருந்தோ குப்பை மண்ணை கொண்டு வந்து சாலையோரம் கொட்டி விட்டு செல்கின்றனர். வெளியிடங்களில் சில பகுதிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து போடும் வாகனங்கள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்படுகின்றன. குப்பைகளை கொட்டும் வாகனங்களுக்கு ஒருசில ஊராட்சிகள் அபராதமும் விதித்து வருகிறது.
சுகாதார சீர்கேடு
இந்த நிலையில் அழகுற அமைக்கப்பட்டு வரும் நான்குவழிச்சாலை பகுதியிலும் தற்போது சிலர் குப்பைகளை வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். அவ்வாறு கொட்டப்பட்ட குப்பைகள் கணபதிபாளையம் அருகில் இருந்து குறிஞ்சேரி வரை அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையோரம் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.அதனால் நான்கு வழிச்சாலைப்பகுதியில் குப்பை மண் கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.