சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தல்... சென்னை விமான நிலையத்தில் ரூ.3½ கோடி தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 3 பேர் கைது

சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.3½ கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தல்... சென்னை விமான நிலையத்தில் ரூ.3½ கோடி தங்கம் பறிமுதல் - பெண் உள்பட 3 பேர் கைது
Published on

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது எதுவும் சிக்கவில்லை.

பின்னர் 2 பேரும் வைத்திருந்த கைப்பை வழக்கத்தை விட அதிக எடையுடன் இருந்ததால் அவற்றை சந்தேகத்தின் பேரில், சோதனை செய்தனர்.

அப்போது கைப்பையில் ரகசிய அறைகள் அமைத்து அதில் தலா 100 கிராம் எடை கொண்ட 68 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து 2 பேரிடம் இருந்து ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ 800 கிராம் எடை கொண்ட 68 தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசிய பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது 2 சங்கிலி, 5 வளையல்கள் ஆகிய தங்க நகைகளை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, இவரிடம் இருந்து ரூ.36 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 740 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com