பிரசவத்தில் பெண் திடீர் சாவு


பிரசவத்தில் பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் திடீரென இறந்தார். தவறான சிகிச்சையால் அவர் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம் அருகே தகரை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 28). இவரது மனைவி கவியரசி (21) இவர்களுக்கு 1½ வயதில் மகிழினி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கவியரசி மீண்டும் கர்ப்பமானார். இதில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் மதியம் வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவியரசியின் கர்ப்பப்பை சுருங்கி உள்ளது.

எனவே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு கவியரசிக்கு பிரசவத்துக்காக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். இதனிடையே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கவியரசிக்கு நேற்று அதிகாலை 2 மணிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.

தவறான சிகிச்சை

அதனை தொடர்ந்து அவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவியரசி பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கவியரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவர்கள், கவியரசிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தவறான முறையில் சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் தான் கவியரசி இறந்துவிட்டார். எனவே சம்மந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அவர்கள் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் ஆகியோர் கவியரசியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினை தொடர்பாக புகார் கொடுங்கள். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் கவியரசியின் உறவினர்கள் புகார் கொடுத்து விட்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் திடீரென இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story