மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு


மத்திய மந்திரி அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
x

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை, கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சந்தித்து பேசினார்.

மோதல் போக்கு

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில், அவரை அமைச்சர் பதவியில் 'டிஸ்மிஸ்' செய்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்தார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆர்.என்.ரவி அறிவித்தார். மேலும் இந்த உத்தரவு தற்காலிகமானதுதான் என்றும் குறிப்பிட்டிருந்தார். 'செந்தில் பாலாஜி விவகாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பதுதான் விவேகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அட்டர்னி ஜெனரலின் கருத்தை நான் பெற இருக்கிறேன்'' என்று கவர்னர் தனது தரப்பு விளக்கத்தை வெளியிட்டார்.

அமித்ஷாவுடன் சந்திப்பு

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, 7 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய மந்திரி அமித்ஷாவை, கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் சூழல், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான கருத்து மோதல் உள்ளிட்டவை குறித்து கவர்னர் விவாதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், இந்த விவகாரத்தில் தனது அதிகார வரம்புகள் உள்ளிட்டவை குறித்தும் அமித்ஷாவுடன், கவர்னர் ஆர்.என்.ரவி தீவிரமாக ஆலோசனை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழக அரசின் மீது அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாகவும் கவர்னர் விவாதித்திருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கக்கோரும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக கலந்துரையாடி இருப்பதாக கூறப்படுகிறது.

13-ந்தேதி சென்னை திரும்புகிறார்

அமித்ஷாவுடன், கவர்னர் ஆர்.என்.ரவி நடத்தி இருக்கும் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில் அடுத்தகட்டமாக சட்ட நிபுணர்களையும் சந்திக்க ஆர்.என்.ரவி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, மத்திய அரசின் தலைமை வக்கீலான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி ஆகியோரையும் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளை தொடர்ந்து கவர்னர் தரப்பில் இருந்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து 13-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்.

ராஜ்பவன் செய்திக்குறிப்பு

இதற்கிடையில் ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டார்', என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story