''அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது ''- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ


அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
x
தினத்தந்தி 2 Dec 2023 6:18 AM GMT (Updated: 2 Dec 2023 6:34 AM GMT)

தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்ளிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மிகத் திறமையாகச் செயல்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியதாகும். பா.ஜனதா அரசு, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத் துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அமலாக்கத்துறை அதிகாரியின் கைது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

மாநில அரசின் அனுமதி இன்றி இந்த அமலாக்கத்துறையை தலைமை செயலகத்துக்குள் ஏவி விட்டு தி.மு.க. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பா.ஜனதா அரசு முனைந்தது. தற்போது மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு உள்ளே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை நுழைந்து சோதனை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. மதுரை மற்றும் சென்னை அமலாக்கத்துறை அலுவலகங்களில் உள்ள பல அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்ளிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30-ந் தேதி, 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.அப்போது ஏலச்சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் கைது செய்த நிகழ்வு நடைபெற்றிருந்தது.

தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பிடிபட்டதன் மூலம் ஒன்றிய பா.ஜனதா அரசின் அரசியல் கருவியான அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து விட்டது. அமலாக்கத்துறை குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரிய வேண்டும். அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பா.ஜனதா அரசு நடத்தி வரும் மிரட்டல் அரசியல் கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story