239-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன்


239-வது முறையாக  வேட்பு மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்
x

தர்மபுரியில் போட்டியிட ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தர்மபுரி,

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்)19-ம் தேதி நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

முதல் நாளான இன்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் தனது மகனுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் சாந்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் ( வயது 64).

வேட்பு மனு தாக்கல் செய்தது குறித்து பத்மராஜன் நிருபர்களிடம் கூறியதாவது :-

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன். 1988ம் ஆண்டு முதல் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். ஜனாதிபதி தேர்தல் முதல் கூட்டுறவு மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ், முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி, எடியூரப்பா, பங்கரப்பா, எஸ்எம்.கிருஷ்ணா மற்றும் விஜய் மல்லையா, சதானந்த கவுடா, அன்புமணி ராமதாஸ், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய பல பிரபலங்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன்.

உலக கின்னஸ் சாதனைக்காகவும், தேர்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேர்தலில் போட்டியிடுகிறேன். லிம்கா புக், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றில் இடம் பெற்றுள்ளேன்.

நான் ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது என்பதே என் எண்ணம். வெற்றி என்பது சிறிது நேரமே இருக்கும். தோல்வியை சுமந்து கொண்டே இருக்கலாம். எனது தேர்தல் தோல்விகளுக்காக இதுவரை ரூ.1 கோடி வரை செலவிட்டுள்ளேன். கடந்த 36 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிடுகிறேன். நான் வார்டு உறுப்பினர் தேர்தலில் வார்டு மாற்றி நின்றதால் பூஜ்ஜியம் ஓட்டும், மேட்டூர் சட்டமன்ற தேர்தலில் எஸ்.ஆர்.பார்த்திபனை எதிர்த்து போட்டியிட்டு 6 ஆயிரம் ஓட்டுக்கள் வரை அதிகபட்சமாக பெற்றுள்ளேன். தற்போது 239-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story