செல்போன் கடையில் தகராறு செய்தவர் கைது


செல்போன் கடையில் தகராறு செய்தவர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2022 12:30 AM IST (Updated: 22 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் செல்போன் கடையில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மதன்சிங் (வயது 37). இவர், தேனியில் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் கோடாங்கிபட்டியை சேர்ந்த லெனின் மகன் சிலம்பரசன் (31) செல்போன் பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்தார். அவரும் அவருடைய மனைவி தனலட்சுமி, தங்கை மாலதி ஆகியோரும் குடும்ப செலவு மற்றும் மருத்துவ செலவுக்காக மதன்சிங்கிடம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கொடுக்காமல் இருந்த நிலையில், கடையில் பொருட்கள் குறைந்ததால் சி.சி.டி.வி. காட்சிகளை மதன்சிங் பார்வையிட்டார். அப்போது சிலம்பரசன் செல்போன் உதிரி பாகங்களை திருடிச் சென்ற காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. அதுகுறித்து அவர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில், சிலம்பரசன் மற்றும் அவருடைய மனைவி, தங்கை ஆகியோர் மதன்சிங்கின் கடைக்கு சென்று அவரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் செய்தார். அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேனி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சிலம்பரசன், தனலட்சுமி, மாலதி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் சிலம்பரசனை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story