முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தல்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) அகில இந்திய பொதுச் செயலாளருமான அண்ணாமலை பெரம்பலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் கொண்டு வந்து, அதனை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்திருப்பதை எங்கள் கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம். இந்த திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தவும், மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு வலியுறுத்துகிறோம். தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்ற முன்வரவில்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆளும் 5 மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். எனவே தமிழக அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எமிஸ் இணையதளத்தால் பள்ளிக்கல்வித்துறை தற்போது புள்ளி விவர துறையாக மாறிவிட்டது. எண்ணும்-எழுத்தும் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தொடங்குவதை கைவிட வேண்டும். பேரளியில் உள்ள பெரம்பலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை பெரம்பலூருக்கு கொண்டு வர பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

அப்போது தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் நம்பிராஜ், பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக பெரம்பலூர் முத்து நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த தமிழக ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் வருவாய் மாவட்ட கிளை தேர்தலுக்கு சிறப்பு பார்வையாளராக அண்ணாமலை செயல்பட்டார். இத்தேர்தல் மூலம் தமிழக ஆசிரியர் கூட்டணி பெரம்பலூர் மாவட்டத்துக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


Next Story