

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்காக வருகிற 20-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மண்டல அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கைக்கான தொழிற்பழகுனர் முகாம் புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் 10, 12-ம் வகுப்பு, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு தொழிற்பழகுனராக சேர்ந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள உள்ளவர்கள் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்கள் 2 மற்றும் புகைப்படம் அவசியம் கொண்டு வர வேண்டும். தொழிற்பழகுனராக தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். தொழிற் பழகுனர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.