புதுவையில் நீண்ட இழுபறிக்கு பின் உடன்பாடு: என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு பா.ஜ.க., அ.தி.மு.க. 14 தொகுதிகளில் போட்டி


புதுவையில் நீண்ட இழுபறிக்கு பின் உடன்பாடு: என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு பா.ஜ.க., அ.தி.மு.க. 14 தொகுதிகளில் போட்டி
x
தினத்தந்தி 10 March 2021 4:39 AM IST (Updated: 10 March 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறிக்கு பின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 14 இடங்களை பா.ஜ.க., அ.தி.மு.க. பிரித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை இழந்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பதவிகளை ராஜினாமா செய்தவர்கள் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளில் சேர்ந்தனர்.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் பா.ஜ.க.வுடன் சேர கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரங்கசாமி தேர்தலில் தனித்துப்போட்டியிடும் அதிரடி முடிவுக்கு வந்தார்.

பா.ஜ.க. அதிர்ச்சி

இது என்.ஆர்.காங்கிரஸ் இருந்தால் எளிதில் வெற்றி பெற முடியும் என கருதும் பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் ரங்கசாமியை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. பலமுறை பேச்சு நடத்த அழைத்தும் ரங்கசாமி பிடி கொடுக்காமல் நழுவி வந்தார்.

இதற்கிடையே தேர்தலில் தனித்து போட்டியிட வசதியாக மாற்று கட்சியில் செல்வாக்குடன் இருப்பவர்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்க்கும் வேலையில் ரங்கசாமி இறங்கினார்.

புதுவை நிலவரம் குறித்து டெல்லி மேலிடத்தில் பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். இதையடுத்து உள்துறை மந்திரி அமித்‌ஷாவே நேரடியாக களம் இறங்கினார். ரங்கசாமியை தொடர்பு கொண்டு அவர் பேசினார்.

16 தொகுதிகள் ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து தனித்து போட்டியிடுவது என்ற ரங்கசாமியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு சம்மதம் தெரிவித்தார்.

உடனடியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி பா.ஜ.க.வுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பது குறித்த முடிவை ரங்கசாமி தெரிவித்தார். இதனால் புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஒப்பந்தம் கையெழுத்தானது

தொகுதி ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, ராஜீவ்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலையில் அண்ணாமலை ஓட்டலில் நேற்று நடந்தது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பா.ஜ.க. புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன்மூலம் நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

ரங்கசாமி தலைமை

தொடர்ந்து பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள்?

பதில்: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார்.

கேள்வி: கூட்டணியில் பா.ம.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுமா?

பதில்: பா.ம.க.வுக்கு தொகுதி ஒதுக்கீடு இல்லை.

கேள்வி: ரங்கசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா?

பதில்: முதல்-அமைச்சர் யார்? என்பது குறித்து இப்போதைக்கு கூற முடியாது. தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி தேர்வு செய்வார்கள் என்றார்.

அதைத்தொடர்ந்து ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சியை பிடிப்போம்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. இணைந்து சந்திக்க உள்ளோம். இந்த கூட்டணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம். புதுவையின் எதிர்காலத்தை கருதி இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுவை மாநிலம் வளர்ச்சி பெறும்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

Next Story