தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வேட்பு மனுதாக்கல்
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் எல்.முருகன் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
தாராபுரம்,
தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சாா்பில் பா.ஜனதா வேட்பாளராக தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவா் நேற்று தனது வேட்பு மனுவை தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்வதற்காக உடுமலை ரவுண்டா பகுதிக்கு வந்தார்.
பா.ஜனதா கட்சி, அ.தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர் எல்.முருகன், கால்நடை பராமாிப்புத்துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்த வேனில் மேள தாளம் முழங்க பொள்ளாச்சி சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு முன்பு கரகாட்டம் நடைபெற்றது. சில தொண்டர்கள் வேல் ஏந்திக்கொண்டு சென்றனர்.
வேட்பு மனு தாக்கல்
பா.ஜனதாவின் மகளிா் அணியை சோ்ந்தவா்கள் தாமரை சின்னம், கட்சி கொடி வண்ணம் கொண்ட சேலை அணிந்து வந்திருந்தனா். சிலர் பாா்வதி, சிவன், விநாயகா், முருகன் வேடம் அணிந்து சென்றனர். பின்னா் சப்-கலெக்டா்அலுவலகத்துக்கு வெளியே வேன் வந்ததும், வேனில் இருந்து இறங்கி சப்-கலெக்டா் பவன்குமாாிடம் வேட்பு மனுவை வேட்பாளா் எல்.முருகன் தாக்கல் செய்தாா்.
சொத்து மதிப்பு ரூ.2½ கோடி
எல்.முருகன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் வருமாறு:-
எல்.முருகன் கையிருப்பாக ரூ.45 ஆயிரமும், ஒரு கார், 240 கிராம் தங்க நகை, வங்கி இருப்பு உள்பட மொத்தம் அசையும் சொத்தாக ரூ.84 லட்சத்து 7 ஆயிரத்து 596 இருப்பதாகவும், ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும், மனைவி கலையரசி பெயரில் கையிருப்பாக ரூ.75 ஆயிரம், ஒரு மொபட், 720 கிராம் தங்க நகைகள், வங்கி இருப்பு உள்பட மொத்தம் அசையும் சொத்தாக ரூ.65 லட்சத்து 2 ஆயிரத்து 619-ம், ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனது மகன் தரணிஷ் பெயரில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அசையும் சொத்தும், மற்றொரு மகன் இந்தரஜித் பெயரில் ரூ.1 லட்சம் அசையும் சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடன்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எல்.முருகன் 2019-2020-ம் ஆண்டு வருமானமாக ரூ.29 லட்சத்து 18 ஆயிரத்து 501-ம், 2020-2021-ம் ஆண்டு வருமானமாக ரூ.29 லட்சத்து 86 ஆயிரத்து 150-ம் தாக்கல் செய்து உள்ளார்.
Related Tags :
Next Story