நந்திகிராம் தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.காங்கிரஸ் வேண்டுகோள்


நந்திகிராம் தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.காங்கிரஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 May 2021 4:16 PM GMT (Updated: 2 May 2021 4:16 PM GMT)

நந்திகிராம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகொள் விடுத்துள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.
 
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. அதில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜியை விட 1,736 வாக்குகள் அதிகம்பெற்றார்.

இதன் மூலம் மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், நந்திகிராமில் பதிவான தபால் வாக்குகளையும், நந்திகிராம் வாக்குச்சாவடி எண் 210-ல் பதிவான வாக்குகளையும் உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story