பாகிஸ்தானில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் பலி


பாகிஸ்தானில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் பலி
x

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர்.

கராச்சி,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு செஹ்வான் ஷெரீப்பில் உள்ள புனித சூஃபி ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று​​ கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அண்மையில் அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ள நீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 8 பெண்கள், 6 சிறுமிகள், 6 சிறுவர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு சையத் அப்துல்லா ஷா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.

சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அந்த நிறுவனத் தலைவர் டாக்டர் மொயின் சித்திக் தெரிவித்தார். எனினும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார். கைர்பூர் மிர்ஸை சேர்ந்த அந்த வேன் டிரைவர் சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை பார்க்க தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.


Next Story