பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் மீது ஊழல் விசாரணை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் மீதான ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்துமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப் மீது ஊழல் விசாரணை
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் 2001ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அதிபர் பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப் (வயது 74). அவர் அதிபர் பதவி வகித்தபோது ஊழல் செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓய்வுபெற்ற துணை கர்னல் இனாமுர் ரகீம் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் தேசிய புலனாய்வு முகமையில் புகார் செய்து முஷரப் மீதான ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முஷரப், பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவுடன் சமர்ப்பித்த சொத்து பட்டியல் மூலம் அவர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்தது தெரிய வந்து உள்ளதாகவும் இனாமுர் ரகீம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரது புகார் மனுவை ஏற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மறுத்து விட்டது.

அவர் ராணுவ தளபதியாகவும், அதிபராகவும் பதவி வகித்ததால், அவருக்கு விலக்கு உரிமை உள்ளதாகவும், அவர் தேசிய புலனாய்வு முகமை சட்டத்தின் கீழ் வரவில்லை எனவும் அது கூறி விட்டது. ஆனால் வழக்குதாரர் இனாமுர் ரகீம் விடவில்லை. அவர் இது தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில், அவர் முஷரப் மீதான ஊழல் குற்றச்சாட்டின் மீது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மறுத்து விட்டதைக்கூறி, அதற்கான உத்தரவை கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு விசாரித்தது.

முஷரப் தரப்பில் அவரது வக்கீல் அக்தர் ஷா தாக்கல் செய்த பதில் மனுவில், ராணுவ அதிகாரி ஒருவரின் ஊழல் நடவடிக்கைகள்மீது விசாரணை நடத்துவது பற்றி தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் ஏதும் கூறப்படவில்லை, எனவே முஷரப் மீதான புகாரை விசாரிக்க மறுத்து தேசிய புலனாய்வு முகமை திருப்பி அனுப்பியது சரிதான் என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இரு தரப்பு வாதத்தை கேட்ட இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு, முஷரப் மீதான ஊழல் புகாரின்மீது தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com