காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது: பாகிஸ்தான் சொல்கிறது

காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. #Pakistan
இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி, இஸ்லாமாபாதில் அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசேன் பேசியபோது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய செயல்பாடுகளால், பிராந்திய அமைதிக்கு இந்தியா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு உடனடி மற்றும் அமைதி தீர்வு காணப்பட வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிப்பது மட்டுமே, காஷ்மீர் பிரச்னைக்கான ஓரே தீர்வாக இருக்கும். இதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து தனது ஆதரவை அளித்து வரும்.
உலகில் நிலையான அமைதியை ஏற்படுத்துவது, பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடாதது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே, பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கை அமைந்துள்ளது. இந்த கண்ணோட்டத்துடனேயே, உலக அமைதிக்கு பாகிஸ்தான் முக்கிய பங்கு ஆற்றி வருகிறது. ஆப்கானிஸ்தான் பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து தனது பங்களிப்பை அளிக்கும்” இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறீசேனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு, இந்தியாவுடன் அப்பகுதி இருந்தபோது, இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்காக தனிநாடு கோரி, அனைத்து இந்திய முஸ்லிம் லீக் கட்சியால் கடந்த 1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று, புகழ்பெற்ற லாகூர் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இத்தினத்தை, பாகிஸ்தான் தேசிய தினமாக ஆண்டுதோறும் பாகிஸ்தான் கொண்டாடி வருகிறது.
Related Tags :
Next Story






