சீனாவுடனான உறவு பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்துகளுக்கு சீன வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்பு

சீனாவுடனான உறவு பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்துகளுக்கு சீன வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்பு தெரிவித்து உள்ளார். #PMmodi #China
பெய்ஜிங்,
சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ஷாங்கிரி லா பேச்சுவார்த்தையில், கலந்து கொண்டு பேசும் போது, இந்தியா-சீனா உறவு பற்றி பேசினார். மோடி பேசும் போது, “ இந்தோ–பசிபிக் பிராந்திய நிகழ்வுகளில்தான், உலகத்தின் தலைவிதி அடங்கி இருக்கிறது. மோதல் நிறைந்த ஆசியா, நம்மை பின்னுக்கு தள்ளி விடும். ஒத்துழைப்பு நிறைந்த ஆசியா, இந்த நூற்றாண்டை வடிவமைக்கும்.
இந்தியாவும், சீனாவும் பிரச்சினைகளை கையாள்வதில் முதிர்ச்சியை கடைபிடித்து வருகின்றன. இரு நாடுகளும் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகள். எனவே, போட்டி நிலவுவது இயல்புதான். ஆனால், இந்த போட்டி, மோதலாக மாறிவிடக்கூடாது. வேறுபாடுகள், சச்சரவுகளாக மாற அனுமதிக்கக்கூடாது” என்று பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்து உள்ளது. தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சீன வெளியுறவுத்துறை மந்திரி, ஹூ சுன்யிங் இது குறித்து கூறியதாவது:- “இந்தியா-சீனா உறவு பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட நேர்மறையான கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். இது போன்ற நேர்மறையான கருத்துக்களை நாங்கள் போற்றுகிறோம்” என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி -சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையே நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு பற்றி பேசிய ஹூ சுன்யிங், “ சர்வதேச விவகாரங்கள், இரு தரப்பு உறவுகள் ஆகியவை பற்றி இரு தலைவர்களும் அப்போது, ஆலோசனை நடத்தியதாகவும், இதில் பல உடன்பாடுகளை எட்டியதாகவும்” குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை மிகவும் முதிர்ச்சியோடு கையாள ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






