ரமலானில் 5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு வழங்கிய சீக்கிய தொண்டு நிறுவனம்


ரமலானில் 5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவு வழங்கிய சீக்கிய தொண்டு நிறுவனம்
x
தினத்தந்தி 15 Jun 2018 5:26 AM GMT (Updated: 15 Jun 2018 5:26 AM GMT)

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் தஞ்சமடைந்த 5000 சிரிய அகதிகளுக்கு சீக்கிய தொண்டு நிறுவனம் இப்தார் உணவை வழங்கியது. #Ramzan

லண்டன்,

‘ரம்ஜான் கிச்சன்’ மூலம் லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்படும் சீக்கிய தொண்டு நிறுவனமான 'கல்சா எய்ட்’ லெபனான் மற்றும் ஈராகில் உள்ள 5000 சிரிய அகதிகளுக்கு இப்தார் உணவை வழங்கியது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த போது கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட போது மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளில் தஞ்சம் அடைந்தார்கள் 

இப்படி தஞ்சம் அடைந்து லெபனான் மற்றும் ஈராக்கில் இருக்கும் 5000 சிரிய அகதிகளுக்கு சீக்கிய தொண்டு நிறுவனம் உணவு பாக்கெட்டுகளை வழங்கி உள்ளது.  

மனிதநேயத்துக்கும், உதவிக்கும் நிறம், இனம், பார்க்கத் தேவையில்லை என்பதை உலக அரங்கில் எப்போதும் சீக்கிய தொண்டு நிறுவனம் நிரூபித்து வருகிறது.
 
இதேபோன்று ஈராக்கின் மொசூல் நகரில் அகதிகளாக உள்ள 500 சிறார்களுக்கு தொண்டு நிறுவனம் ஆடைகள், காலணிகளை வழங்கியும், அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியை பொங்க செய்து உள்ளது. 



தொண்டு நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “2014-ம் ஆண்டு மொசூல் நகரில் போர் நடந்த போது இவர்களுடைய வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது நகரம் போரினால் சீர்குலைந்துவிட்டது. அகதிகள் முகாமில் கடினமான சூழ்நிலையை எதிர்க்கொள்ளும் இந்த குழந்தைகளுக்கு ஆடைகள் ரமலான் தினத்தில் ஒரு பரிசாக அமையும்,” என குறிப்பிட்டு உள்ளது. 

சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்த போதும், போர்க்களத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு சீக்கியர்களின் 'கல்சா எய்ட்' என்ற தொண்டு நிறுவனம் உணவு, உடைகள், காலனிகள் கொடுத்து உதவியது. மியான்மரில் இருந்து ரோகிங்கியா இஸ்லாமியர்கள் விரட்டப்பட்ட போதும் பரிதவித்த அவர்களுக்கு தேவையான உதவிகளை தொண்டு நிறுவனம் செய்து கொடுத்தது.

Next Story