பாகிஸ்தான் அதிகாரிகளுக்கான ராணுவ பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி


பாகிஸ்தான் அதிகாரிகளுக்கான ராணுவ பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி
x
தினத்தந்தி 11 Aug 2018 11:00 PM GMT (Updated: 11 Aug 2018 6:52 PM GMT)

பாகிஸ்தான், தன் சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்கா கருதுகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் அரசை அமெரிக்கா இது தொடர்பாக பல முறை  எச்சரித்தும் பயங்கரவாதிகள் மீது அந்த நாடு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஆண்டு பாகிஸ்தான் பாதுகாப்பு நிதி உதவி 1.15 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7,820 கோடி) அமெரிக்கா நிறுத்தி வைத்தது. சமீபத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு செலவுகளை ஈடுசெய்து வழங்குகிற நிதியை வெறும் 150 மில்லியன் டாலராக (சுமார் ரூ.1,020 கோடி) அமெரிக்கா குறைத்தது.

இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ராணுவ நிறுவனங்களில் பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு அளித்து வந்த ராணுவப்பயிற்சியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் அடுத்த கல்வி ஆண்டில் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கான 66 இடங்களை நிரப்புவதற்கு அமெரிக்க ராணுவ நிறுவனங்கள் போராடுவதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சிக்காக ஆண்டுதோறும் அளித்து வந்த நிதியையும் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி விட்டது.

சமீபத்தில் பாகிஸ்தானும், ரஷியாவும் தங்கள் முதல் கூட்டு ராணுவ ஆலோசனை குழு கூட்டத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ள நிலையில், அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.


Next Story